மாவட்ட செய்திகள்

காலாப்பட்டு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது + "||" + A young man who has been involved in a series of robbery in the passage area

காலாப்பட்டு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

காலாப்பட்டு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
காலாப்பட்டு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டு பகுதியில் வீடுகளில் தொடர் திருட்டு நடந்து வந்தது. சமீபத்தில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் 39 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது.


இதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவின்பேரில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஹேமசந்திரன் அறிவுறுத்தலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் போலீசார் ரோந்து வந்தபோது ரோட்டில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டவுடன் ஓட முயற்சித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் மரக்காணம் தாலுகா கூனிமேடுகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுமன் என்ற ஸ்ரீமன் (வயது 23) என்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக பேசவே சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் கனகசெட்டிகுளம் பகுதியில் இரவில் வந்து திருடுவதற்காக வீடுகளை நோட்டமிட்டதாக தெரிவித்தார்.

மேலும் காலாப்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 வீடுகளில் புகுந்து சுமார் 37½ பவுன் நகைகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 34½ பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சுமன் கீழ்புத்துப்பட்டு, தேவனாம்பட்டினத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சுமனை கைது செய்து நகைகளை மீட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் பூபாலன், வினோத், பச்சையப்பன், சக்திவேல், ஜெகநாதன், நிர்மல் ஆனந்தன், ஆனந்தராஜ் ஆகியோரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.