மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் கடலில் குளித்த போதுராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி + "||" + When bathing with friends in the sea The student is killed in the giant wave

நண்பர்களுடன் கடலில் குளித்த போதுராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி

நண்பர்களுடன் கடலில் குளித்த போதுராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
திருவொற்றியூர்,

மணலி என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவர், மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவருடைய மனைவி ருக்மணி. இவர், மணலி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார்.

இவர்களுக்கு சதீஷ் (வயது 17) என்ற மகன் இருந்தார். இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.


நேற்று சதீஷ், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான விஜய், பிரபு, ராஜேஷ், ரகு, சேவியர் ஆகியோருடன் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சதீஷ், பிரபு இருவரும் ராட்சத அலையில் சிக்கிக்கொண்டனர்.

இதை பார்த்த சக நண்பர்கள் பிரபுவை காப்பாற்றிவிட்டனர். ஆனால் அவர்களால் சதீஷை மீட்க முடியவில்லை. அவரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அங்கு மீன்பிடி வலைகளை காய வைத்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் தெரிவித்தனர்.

உடனடியாக மீனவர்கள் கடலில் இறங்கி சதீஷை தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு சதீஷை பிணமாக மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், பலியான சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் கடந்த 4-ந் தேதி திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்த சந்தோஷ் (19) என்ற வாலிபரும் தனது நண்பர்களுடன் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் அருகே கடலில் குளித்தபோது, சந்தோஷை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச்சென்றது.

அதன்பிறகு அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. அவர் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் அவரது உடல் இன்னும் கரை ஒதுங்கவில்லை.

அடிக்கடி இதுபோல் ராட்சத அலையில் சிக்கி உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் பொதுமக்கள், கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்க வேண்டும். மீறி குளிப்பவர்களை தடுக்க இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.