மாவட்ட செய்திகள்

சென்னை, புறநகர் ரெயில் நிலையங்களில் கஞ்சா விற்பனை படுஜோர்நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை + "||" + Kanjaya is sold in Chennai and suburban railway stations Passengers request to take action

சென்னை, புறநகர் ரெயில் நிலையங்களில் கஞ்சா விற்பனை படுஜோர்நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

சென்னை, புறநகர் ரெயில் நிலையங்களில் கஞ்சா விற்பனை படுஜோர்நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை
சென்னை மற்றும் புறநகர் ரெயில் நிலையங்களில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,

சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து வட மாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரதானமாக இருக்கும் இந்த 2 ரெயில் நிலையங்களில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


சென்டிரல் ரெயில் நிலையத்தில் அனைத்து நுழைவுவாயில் பகுதிகளிலும் ஸ்கேனர் கருவி, போலீசார் கண்காணிப்புக்கு பிறகே உடைமைகளை பயணிகள் எடுத்து செல்கின்றனர். ஆனால் அதன் அருகே இருக்கும் புறநகர் ரெயில் நிலையத்தில் (மூர்மார்க்கெட்) அதற்கான ஏற்பாடு இல்லை. இதேநிலை தான் எழும்பூர் ரெயில் நிலையத்தின் புறநகர் பகுதியிலும் இருக்கிறது.

இதை பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனையில் கோலோச்சுகின்றனர். சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் வழியாக எடுத்துச்சென்று அதன் தொடர்ச்சியாக வரும் புறநகர் ரெயில் நிலையங்களிலும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பகுதிகளிலும் கஞ்சா விற்பனையை விரிவுபடுத்தி வருகின்றனர்.


ஆந்திராவில் இருந்து தான் பெரும்பாலானோர் கஞ்சாவை எடுத்துக்கொண்டு தமிழகத்துக்கு உள்ளே நுழைகின்றனர். அப்படி ஆந்திராவில் இருந்து வரும் ரெயில்கள் சென்டிரலுக்கு தான் வரும். சென்டிரலுக்கு வந்தால் ஸ்கேனர் கருவியால் கஞ்சா கொண்டு செல்வது தெரிந்துவிடும் என்பதால், புறநகர் ரெயில் நிலையங்களிலேயே இறங்கி சப்ளை செய்துவிடுகின்றனர்.

இது அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வாக சமீப நாட்களாக இருந்து வருகிறது. அண்மையில் கூட ரெயில் பெட்டியின் கீழ்த்தளத்தில் கஞ்சா பைகளை ஒளித்து வைத்து கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பணிமனையில் ரெயில் பெட்டியை பழுது பார்க்கும் போது அந்த பைகளை ஊழியர்கள் பார்த்து போலீசாரிடம் தகவல் கொடுத்தனர்.

இதேபோல், சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் அவ்வப்போது கஞ்சா வைத்திருந்ததாக சிலரை போலீசார் கைது செய்வதையும் பார்க்க முடிகிறது. கஞ்சா ஊடுருவல் ரெயில்களின் வழியாக தான் மற்ற இடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இருப்பினும் அதில் திருப்திகரமாக இல்லை என்பதே பயணிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

கஞ்சா விற்பனை ஒருபுறம் படுஜோராக நடந்து கொண்டு இருக்க, அதே கஞ்சாவை உட்கொண்டுவிட்டு ரெயில் நிலையங்களில் படுத்து உறங்கி, பயணிகளிடம் கொள்ளை, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ரெயில்களில் கஞ்சா ஆசாமிகளின் தொல்லை அதிகமாகவே இருப்பதாக பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பயணிகளிடம் குறைகளை கேட்பதற்காக சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் மின்சார ரெயிலில் ஏறி பயணம் செய்தார்.

அப்போது மீஞ்சூரில் பயணிகளிடம் குறைகள் குறித்து கேட்டபோது, ‘கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாக இருக்கின்றன’ என்ற குற்றச்சாட்டை தான் முதலில் முன்வைத்தனர்.


இதை கட்டுப்படுத்த சென்டிரல், எழும்பூர், மூர்மார்க்கெட் ரெயில் நிலையங்களில் இருப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முக்கிய பிரதான புறநகர் ரெயில் நிலையங்களிலும் பலப்படுத்த வேண்டும் என்பதும், கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதும் ரெயில் பயணிகளின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில்வே போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை கொண்டு இனி ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்’ என்றார்.