அரசு ஊழியர்கள் குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை அண்ணாநகர் மேற்கு பாடிக்குப்பம் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை என ‘தினத்தந்தி’யில் வெளியான செய்தியை தொடர்ந்து அங்கு உடனடியாக தற்காலிக குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் வழங்கினர்.
அம்பத்தூர்,
தலைமைச்செயலக ஊழியர்கள் அலுவலகம் சென்றுவர பஸ்வசதி செய்து தரவில்லை. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் நீர் கசிவு உள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்த குறைகள் தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’யில் கடந்த 5-ந் தேதி வெளியானது.
இதையடுத்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், வனத்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோர் அரசு ஊழியர்கள் குடியிருப்புக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். குடியிருப்புக்குள் குடிநீர் வருவதற்கு வசதியாக தற்காலிகமாக புதிய குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கினர். குடியிருப்பை சுற்றி இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, புதருக்குள் இருந்த விஷப்பாம்புகள் பிடித்து செல்லப்பட்டன.
எரியாத மின்விளக்குகளும் உடனடியாக மாற்றப்பட்டு புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. நீர்கசிவு உள்ள வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை சரி செய்யும் பணியும் தொடங்கப்பட்டது.
மேலும் குடியிருப்பில் விரைவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், குடியிருப்பில் உள்ள தலைமை செயலக அலுவலர்கள் அலுவலகம் சென்றுவர மாநகர பஸ் வசதியும் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story