தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு நூல் வியாபாரி தற்கொலை
திருப்பூரில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்படை எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் பாளையக்காடு காயத்ரிநகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 50). இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நூல் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. வெளி வியாபாரிகள் அண்ணாமலைக்கு கொடுக்க வேண்டிய சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் அண்ணாமலை கொடுக்க வேண்டியவர்களுக்கு சரியான நேரத்தில் பணத்தை கொடுக்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் சார்ந்திருக்கும் சங்கத்திடமும் புகார் தெரிவித்ததாக தெரிகிறது. சங்கம் சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அண்ணாமலை தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற அண்ணாமலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய உறவினர்கள் அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் நூல் குடோனில் சென்று பார்த்தனர். அப்போது நூல் குடோனின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அண்ணாமலை அங்கு தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அருகில் அவர் தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாமலை எழுதி வைத்துள்ள கடிதத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து தொழில் நலிவடைந்து வருவதையடுத்து பல தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது திருப்பூர் வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது நூல் மொத்த வியாபாரியான அண்ணாமலை தற்கொலை செய்து கொண்டிருப்பது தொழிலதிபர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story