மும்பையில் தொடரும் அடைமழை இன்னும் 3 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல்


மும்பையில் தொடரும் அடைமழை இன்னும் 3 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல்
x
தினத்தந்தி 9 July 2018 5:30 AM IST (Updated: 9 July 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் விடாமல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வய்ப்பு உள்ளது. இதற்கிடையே ஒரு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

மும்பை, 

மும்பையில் விடாமல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வய்ப்பு உள்ளது. இதற்கிடையே ஒரு ரெயில்வே மேம்பால தூணில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

பருவமழை தீவிரம்

மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மாநில தலைநகர் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.

நேற்றும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக நகரமே வெள்ளகாடாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

வெள்ளம்

கனமழை காரணமாக சயான், கிங்சர்க்கிள், மாட்டுங்கா, செம்பூர், அந்தேரி, மிலன் சப்வே, விக்ரோலி, காட்கோபர், இந்துமாதா, வடலா, சுன்னாப்பட்டி, குர்லா உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்த இடங்களில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியது.

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் வெள்ளநீர் வடியாமல் அந்த பகுதிகள் ஏரிகளாக காட்சி அளித்தன. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தேரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.

ரெயில்கள் தாமதம்

பாதசாரிகளும் வெள்ளத்தால் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். ரெயில்வே தண்டவாளங்களையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு உணரப்பட்டது. கனமழை காரணமாக மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் நேற்று வாராந்திர பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக ரெயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் தாமதமாக வந்தடைந்தன.

மேம்பால தூணில் விரிசல்

அந்தேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கனமழையின் போது, ரெயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை அடுத்து மும்பை முழுவதும் உள்ள ரெயில்வே மேம்பாலங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காட்கோபர் பான்ட்நகர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சியினர் ஆய்வு செய்த போது அதில் உள்ள நடைபாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 நாள் நீடிக்க வாய்ப்பு

தற்போது ரெயில்வே ஊழியர்களின் மேற்பார்வையில் மாநகராட்சியினர் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்கோபர் ரெயில்வே பாலம் வழியாக செல்ல இருந்த வாகனங்கள் காந்திநகர், மற்றும் வேறு சில பகுதிகள் வழியாக திருப்பிவிடப்பட்டன.

மழை நேரத்தில் மேம்பாலங்களில் விரிசல் ஏற்பட்டு வருவதும், மரங்கள் விழுவதும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Next Story