சேலம் புதிய பஸ்நிலையத்தில் 10 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு


சேலம் புதிய பஸ்நிலையத்தில் 10 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 July 2018 11:22 PM GMT (Updated: 8 July 2018 11:22 PM GMT)

சேலம் புதிய பஸ்நிலையத்தில் 10 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம்,

சேலம் புதிய பஸ்நிலைய பகுதியில் காபி கடைகள், பழக்கடைகள், செல்போன் கடைகள், பேன்ஸி ஸ்டோர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. பஸ்நிலையத்தில் நடைபாதையை அடைத்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு பயணிகளுக்கு இடையூறு மற்றும் கடை வாடகை தொடர்பாக 10 கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் கடைகளை வைத்திருந்தவர்கள் கோர்ட்டில் முறையிட்டு அகற்ற தடை பெற்றனர். கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த 4-ந் தேதி தீர்ப்பு வந்தது. இதில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள 10 கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி, வருவாய் ஆய்வாளர் தமிழ்மணி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற புதிய பஸ்நிலையத்திற்கு வந்தனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக அங்கு குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 கடைகள் அகற்றப்பட்டன. மேலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த 15 கடைகளும் அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், கோர்ட்டு 10 கடைகளை மட்டுமே அகற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் சம்பந்தம் இல்லாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுகிறார்கள். இதுகுறித்து எந்தவொரு முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. திடீரென அதிகாரிகள் அத்துமீறி கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தற்போது அகற்றப்படும் கடைகளுக்கு முறையாக மாநகராட்சி வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு பயணிகளுக்கு இடையூறாக ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வியாபாரிகளிடம் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story