பந்தலூரில் அபாயகரமான மரங்கள் கணக்கெடுப்பு


பந்தலூரில் அபாயகரமான மரங்கள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 8 July 2018 11:23 PM GMT (Updated: 8 July 2018 11:23 PM GMT)

ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்து தாய், மகள் பலியானதை தொடர்ந்து பந்தலூரில் அபாயகரமான மரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பந்தலூர், 

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் கற்பூர மரங்கள் அதிகமாக நடவு செய்யப்பட்டன. இந்த மரங்கள் 100 அடி உயரத்தையும் தாண்டி வளரும் தன்மை கொண்டது. பருவமழைக்காலங்களின் போது இந்த மரங்கள் சாலைகளின் குறுக்கே விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் வீடுகளின் மேல் சாய்ந்துவிழுவதால் கடும் சேதம் ஏற்படுவதுடன், உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

பந்தலூர் தாலுகா மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் இருளப்பன். இவரது மனைவி மூக்காயி (வயது 72). இவர்களது மகள் ராஜேஷ்வரி (48). நேற்று முன்தினம் மூக்காயி தனது மகள் ராஜேஷ்வரியுடன் அய்யங்கொல்லி கூட்டுறவு வங்கிக்கு ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். நெல்லிமேடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடம் அருகே வந்த போது சாலையோரம் நின்றிருந்த ராட்சத கற்பூர மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் அமர்ந்து இருந்த மூக்காயி, ராஜேஷ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

ராட்சத கற்பூர மரம் ஆட்டோ மீது விழுந்து தாய், மகள் பலியானதால் சாலையோரத்தில் அபாயகரமாக உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பந்தலூர் தாலுகாவில் சாலையோரம் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அனுப்புமாறு வருவாய்துறைக்கும், வனத்துறைக்கும் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

இதையடுத்து, கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன் தலைமையில் பந்தலூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வனச்சரகர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாங்கோடு, அம்பலமூலா, அய்யங்கொல்லி, அத்திச்சால், கொளப்பள்ளி, ஏலமன்னா ஆகிய பகுதிகளில் சாலையோரங்களிலும், குடியிருப்புகளுக்கு அருகாமையிலும் சாய்ந்த நிலையில் நிற்கும் மரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி விரைவில் அந்த மரங்கள் வெட்டி அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story