சேலம் அழகாபுரத்தில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


சேலம் அழகாபுரத்தில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 July 2018 11:25 PM GMT (Updated: 8 July 2018 11:25 PM GMT)

சேலம் அழகாபுரத்தில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சேலம்,


சேலம் அழகாபுரம் ரெட்டியூரில் ராம்நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் சாக்கடை கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீட்டை சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 1-ந் தேதி பெய்த கனமழையின் போது இப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேறாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை அகற்றிட மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் சாரதா கல்லூரி சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் வந்தனர். இவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்த நீரும் இதுவரை வெளியேறவில்லை.


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு கழிவுநீருடன் மழைநீர் தேங்கி உள்ளதால் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எங்கள் பகுதியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வீடுகளுக்குள் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story