மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகள்,அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் போலீசார்


மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகள்,அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் போலீசார்
x
தினத்தந்தி 8 July 2018 11:58 PM GMT (Updated: 8 July 2018 11:58 PM GMT)

தேனி மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளர்.

தேனி,

தேனி மாவட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் நடக்கும் கூட்டங்கள், விழாக்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் துறைக்கு தகவல் கொடுக்கும் பணியை அந்தந்த பகுதிகளை சேர்ந்த தனிப்பிரிவு போலீசார் செய்து வந்தனர். கூட்டங்கள், விழாக்கள், ஆர்ப்பாட்டங்கள் முன்கூட்டியே நடப்பது குறித்து தகவல் கொடுத்து வந்தனர். தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒவ்வொரு கட்சி, அமைப்புக்கும் தனித்தனி போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அலுவலக முற்றுகை போராட்டங்கள், மனு கொடுக்கும் போராட்டங்கள், மறியல் என எந்த நிகழ்வாக இருந்தாலும் முன்கூட்டியே அதுகுறித்த தகவல்களை அறிந்து மாவட்ட போலீஸ் துறை நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள், அமைப்புகளின் செயல்பாடுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள், கட்சிகள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. இதற்கென நியமிக்கப்பட்ட போலீசார் சிலர் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கட்சி, அமைப்பு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தங்களை அறிமுகம் செய்து நட்புறவை ஏற்படுத்தி வருகின்றனர்.

Next Story