மாவட்டத்தில் கிழங்கு வகை பூக்கள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.60 ஆயிரம் மானியம்


மாவட்டத்தில் கிழங்கு வகை பூக்கள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.60 ஆயிரம் மானியம்
x
தினத்தந்தி 9 July 2018 5:36 AM IST (Updated: 9 July 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கிழங்கு வகை பூக்கள் சாகுபடி செய்ய மானியமாக ஹெக்டேருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

திண்டுக்கல், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காய்கறி, பழம், பூக்கள் மற்றும் மலைப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த தோட்டக் கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 40 அல்லது 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 4 ஹெக்டேருக்கு மானிய உதவிகள் வழங் கப்படும். மேலும் விவசாயிகளுக்கு உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, வேளாண் அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டுரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள், இடுபொருட்கள் ஆகியவை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது. மா, கொய்யா அடர் நடவு சாகுபடியில், மா சாகுபடிக்கு ரூ.9 ஆயிரத்து 840, கொய்யாவுக்கு ரூ.17 ஆயிரத்து 599 மதிப்பிலும் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது. திசு வாழைக்கு ஹெக்டேருக்கு ரூ.37 ஆயிரத்து 500 மதிப்பிலும், பப்பாளிக்கு ரூ.23 ஆயிரத்து 100 மதிப்பில் நடவுச்செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலும், ரோஜா, மல்லி, சாமந்தி போன்ற உதிரி பூக்களுக்கு ரூ.16 ஆயிரத்திலும், சம்பங்கி, கிளாடியோலஸ் உள்ளிட்ட கிழங்கு வகை பூக்கள் சாகுபடிக்கு ரூ.60 ஆயிரத்திலும் நடவுச்செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

இதேபோல, முந்திரியில் அடர் நடவு சாகுபடிக்கு, ஹெக்டேருக்கு ரூ.24 ஆயிரமும், சாதாரண சாகுபடிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலும், கோகோ சாகுபடி செய்ய ரூ.12 ஆயிரம் மதிப்பிலும் நடவுச்செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் ‘உழவன்’ செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story