அரசு பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை அனுப்புவோம்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
சூலூர் அரசு பள்ளிக்கு தொடர்ந்து தீ வைக்கப்பட்டு வருவதால் பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கோவை,
கோவையை அடுத்த சூலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பின்புறம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5–ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 150–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இந்த பள்ளிக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து புத்தகம், சீருடை, நாற்காலிகள் ஆகியவற்றை நாசம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இந்த பள்ளியில் ஒரு வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்த சீருடைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீவைத்து விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மற்றும் பள்ளியில் படித்து வரும் மாணவ–மாணவிகள் தங்கள் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுப்பதற்காக நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு நின்றிருந்த அவர்கள் தங்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, சூலூர் அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ–மாணவிகளுடன் பொது மக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
பிறகு மனுகுறித்து பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்த பள்ளியில் கடந்த ஒரு மாதமாக அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் விடுமுறை அன்று இந்த பள்ளியில் உள்ள நாற்காலிகள், மேஜைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாததால், நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறினோம். இதையடுத்து அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த போலீசார், பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம், குழந்தைகளை அனுப்பி வையுங்கள் என்று கூறினார்கள்.
இதையடுத்து நாங்கள் எங்கள் குழந்தைகளை வழக்கமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள், பள்ளியில் வைத்திருந்த சீருடைகள் மற்றும் இலவச காலணிகளுக்கு தீ வைத்து உள்ளனர். தொடர்ந்து அரசு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டு வருவதால் அங்கு படித்து வரும் எங்கள் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளியில் குழந்தைகள் இருக்கும்போது, மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது?.
இந்த பள்ளியில் நன்றாக கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இதை பிடிக்காத சிலர்தான் பள்ளிக்கு தொடர்ந்து தீ வைத்து வருகிறார்கள். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்துபோன்று இங்கு நடப்பதற்கு முன்பு, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பதுடன், காவலாளியை நியமித்தால்தான் நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பள்ளியில் தீ வைக்கப்பட்ட சம்பவம் மாணவ, மாணவிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர்களில் பலர் அழுதபடி இருந்தனர்.கலெக்டரிடம் கண்ணீர் மல்க அவர்கள் மனுகொடுத்த போது அவர்கள் மிறட்சியுடன் இருப்பதைகாணமுடிந்தது.அந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வரும் மாணவன் உதயநிதி அழுதபடி நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களுக்கு கொடுக்கக்கூடிய புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் எல்லாவற்றையும் தீ வைத்து எரித்து விட்டனர். இதனால் நாங்கள் பழைய சீருடைகளை பள்ளிக்கு அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லவே பயமாக இருக்கிறது. எனவே எங்கள் பள்ளிக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்று பரிதாபமாக கூறினான்.