கோவை பீளமேடு பகுதியில் வீடுபுகுந்து திருடிய வடமாநில கும்பல் கைது


கோவை பீளமேடு பகுதியில் வீடுபுகுந்து திருடிய வடமாநில கும்பல் கைது
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 6:55 PM GMT)

கோவை பீளமேடு பகுதியில், வீடு புகுந்து திருடிய வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் மாதவன்(வயது52). தனியார் நிறுவன மேலாளர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருட்டு கும்பலை பிடிக்க, பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்–இன்ஸ்பெக்டர் இப்ராகீம் பாதுஷா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் தீவிர விசாரணை நடத்தி கோவை பீளமேடு பகுதியில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோட்டா லால்(வயது43), ராஜ்குமார்(25), ராம்பிரசாத்(27), பாபுலால்(25), சன்னி(25), கி‌ஷன்லால்(42) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மாதவன் வீட்டில் புகுந்து பணம் திருடியது இவர்கள் தான் என்பது தெரியவந்தது.

கைதான 6 பேரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

எங்கள் ஊரில் சரியாக வேலை கிடைக்காததால் கொள்ளையடித்து பணம் சம்பாதிப்பதற்காக ரெயில் மூலம் கோவை வந்தோம். பின்னர் ரெயில் நிலையம், வ.உ.சி. பூங்கா, பீளமேடு ஆகிய பகுதிகளில் இரவுநேரத்தில் தங்கினோம்.

பகலில் கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பலூன் விற்பனை செய்வோம். பின்னர் வீதி,வீதியாக சென்று பலூன் விற்பது போல பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவோம். வீடு புகுந்து திருடுவதற்கு முன்பாக அந்த வீதியில் 3 இடங்களில் ஆட்களை நிறுத்தி வைப்போம். பின்னர் பூட்டி இருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து எங்கள் கும்பலை சேர்ந்த 2 பேர் உள்ளே புகுந்து பணம்,நகையை திருடி வருவார்கள்.

கோவையில் பல வீடுகளில் புகுந்து அதிக அளவில் பணம், நகையை திருடிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டோம். முதல் திருட்டை சேரன்மாநகரில் நடத்தினோம். திருடிய பணத்தில் ரூ.10 ஆயிரத்தை மது குடித்து செலவழித்தோம். அதற்குள் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டோம். மீதம் உள்ள ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர்.

இவ்வாறு கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story