கோவையில் தனியார் குடோனில் பதுக்கிய 750 கிலோ குட்கா பறிமுதல்
கோவையில் ஒரு தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ குட்கா மற்றும் போதை பாக்குகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மங்கல்சிங் (வயது 65). இவர் பிஸ்கெட், மிட்டாய்கள் உள்பட உணவு பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இதற்காக கோவை தாமஸ் வீதியில் கடை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த கடையின் பின்புறத்தில் பொருட்களை வைப்பதற்காக குடோனும் உள்ளது. இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த கடையில் அதிரடி சோதனை செய்தனர். ஆனால் எந்த பொருட்களும் சிக்கவில்லை.
பின்னர் அதிகாரிகள் அந்த கடையின் பின்புறம் உள்ள குடோனை சோதனை செய்தனர். அங்கு ஒரு இடத்தில் ஏராளமான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது அதற்குள் பாக்கெட் பாக்கெட்டுகளாக குட்கா மற்றும் போதை பாக்குகள் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கு இருந்த அனைத்து பெட்டிகளையும் திறந்து பார்த்தபோது அங்கு ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. உடனே அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பாக்குகள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:–
இந்த குடோன், வீடுகள் அதிகம் இருக்கும் பகுதியில் உள்ளது. இதனால் இங்கிருந்து குட்கா, போதை பாக்குகளின் வாசம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஊதுபத்தியை கொளுத்தி வைத்து உள்ளனர். இதற்காக ஒருவர் அங்கு நியமிக்கப்பட்டு, தொடர்ந்து ஊதுவத்தியை கொளுத்தி வந்துள்ளார். மொத்தம் 32 பெட்டிகளில் குட்கா, பான்பராக், பான்மசாலா மற்றும் போதை பொருட்கள் 750 கிலோ இருந்தன. அதன் மதிப்பு ரூ.7 லட்சத்துக்கும் மேல் இருக்கும்.
இந்த பாக்குகள் அனைத்தும் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டது ஆகும். பெங்களூருவில் குட்கா மற்றும் போதை பாக்குகளுக்கு தடை இல்லை. இதனால் அங்கிருந்து உற்பத்தி செய்யும் போதை பாக்குகளை அதிகளவில் தமிழகத்துக்கு கொண்டு வந்து ரகசியமாக விற்பனை செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் ரெயில் மற்றும் கண்டெய்னர் லாரிகள் மூலம் கோவைக்கு கொண்டு வரப் படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவையில் 2½ டன் குட்கா மற்றும் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ள குட்கா மற்றும் போதை பாக்குகளில் போதை எவ்வளவு சதவீதம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான அறிக்கை வந்த பின்னர், இங்கு இந்த பொருட்களை வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கோவையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தங்கள் பகுதியில் போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவது குறித்த தகவல் கிடைத்தால் பொதுமக்கள் எங்களுக்கு தாராளமாக தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.