மாவட்ட செய்திகள்

தூக்கமாத்திரைகள் தின்ற பி.யூ.சி. மாணவி கழுத்தை நெரித்து கொலை - பாட்டி, தந்தை கைது + "||" + Sleeping pills Student strangled and killed - grandmother, father arrested

தூக்கமாத்திரைகள் தின்ற பி.யூ.சி. மாணவி கழுத்தை நெரித்து கொலை - பாட்டி, தந்தை கைது

தூக்கமாத்திரைகள் தின்ற பி.யூ.சி. மாணவி கழுத்தை நெரித்து கொலை - பாட்டி, தந்தை கைது
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறொரு வாலிபருடன் திருமண ஏற்பாடு செய்ததால் தூக்கமாத்திரைகள் தின்ற பி.யூ.சி. மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு,

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறொரு வாலிபருடன் திருமண ஏற்பாடு செய்ததால் ஆத்திரமடைந்த பி.யூ.சி. மாணவி தூக்கமாத்திரைகள் தின்றார். இதனால் பி.யூ.சி. மாணவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


இதில் தொடர்புடைய பாட்டி, தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா மரவஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமேசப்பா. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இவரது மூத்த மகள் ரூபினி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், ரூபஹட்டி கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வேறொரு வாலிபருடன் தனது மகளுக்கு திருமணம் நடத்த பரமேசப்பா ஏற்பாடு செய்தார். இருவருக்கும் 10-ந்தேதி (அதாவது இன்று) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே மைனர் பெண்ணான கல்லூரி மாணவி வீட்டில் இருந்து வெளியேறி காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து பரமேசப்பா, தனது மகளை பிரவீன் கடத்திச் சென்றதாக சென்னகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பி.யூ.சி. மாணவி மைனர் பெண் என்பதால், அவரை மீட்டு பரமேசப்பாவிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் மாணவி தனது காதலனை தவிர்த்து யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறி அடம்பிடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி பரமேசப்பா தனது மனைவியுடன் மங்களூருவுக்கு சென்றார். தனது மகளை, தாய் தாட்சாயினி பராமரிப்பில் விட்டு சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த ரூபினி திடீரென்று தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதுபற்றி தாட்சாயினி தனது மகன் பரமேசப்பாவிடம் செல்போனில் கூறியுள்ளார். இதை கேட்டு கோபமடைந்த பரமேசப்பா, ரூபினியை கழுத்தை நெரித்து கொலை செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி தாட்சாயினி, ரூபினியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் ரூபினி தற்கொலை செய்துவிட்டதாக தாட்சாயினி, பரமேசப்பா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சென்னகிரி போலீசார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து, ரூபினியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ரூபினியின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்ததும், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பேரில் பரமேசப்பா, தாட்சாயினி ஆகியோரை நேற்று முன்தினம் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரித்தனர்.

அப்போது தாட்சாயினி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரூபினியின் பெற்றோர் வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் மனம் உடைந்த ரூபினி தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும், அதையடுத்து பரமேசப்பா கூறியதன் பேரில் ரூபினியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், அதன் பின்னர் கொலையை மறைக்க ரூபினி தற்கொலை செய்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்தார். இதைதொடர்ந்து தாட்சாயினி, பரமேசப்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து சென்னகிரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.