காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல், 106 பேர் கைது


காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல், 106 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 4:15 AM IST (Updated: 10 July 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 20 பெண்கள் உள்பட 106 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3–ந் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் 231 பேர் பணிக்கு செல்லவில்லை. அந்த துறையில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் என்ஜினீயர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அலுவலர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டன. நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:–

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 35 ஊராட்சிகளில் சுகாதார பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. குப்பைகள் அகற்றப்படாமல், குடிநீர் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து குந்தா ஊராட்சி ஒன்றியமாகவும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அந்த திட்டத்தை தற்போதைய அரசு உடனடியாக நிறைவேற்றி ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கவும், மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி.யில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 106 பேரை கைது செய்தனர்.


Next Story