ஊட்டியில் தங்கும் விடுதிகளின் திட்ட வரைபடம் சமர்ப்பிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்


ஊட்டியில் தங்கும் விடுதிகளின் திட்ட வரைபடம் சமர்ப்பிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 July 2018 10:15 PM GMT (Updated: 9 July 2018 7:03 PM GMT)

ஊட்டியில் தங்கும் விடுதிகளின் திட்ட வரைபடம் சமர்ப்பிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டு உள்ளது. இந்த மாவட்டத்தின் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் மாஸ்டர் பிளான் சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி ஊட்டி நகராட்சி பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் அவ்வப்போது இடிக்கப்பட்டு வருகின்றன.

மாஸ்டர் பிளான் சட்டத்தை மீறியும், வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாக மாற்றி உள்ள கட்டிடங்கள் மீது தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், ஊட்டி நகராட்சி அதிகாரிகள் 14 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். ஊட்டியில் விதிமுறை மீறிய 580 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேறு நகராட்சிகளில் இருந்து அதிகாரிகள் தேவை என நகராட்சி நிர்வாகத்துக்கு ஊட்டி நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து சீல் வைத்த தங்கும் விடுதிகளை திறக்கவும், மற்ற தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு கலெக்டர் தங்களது கட்டிடங்களை வணிக கட்டிடமாக மாற்ற புதியதாக திட்ட வரைபடத்தை நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28–ந் தேதி நகராட்சி கமி‌ஷனரிடம் சீல் வைக்கப்பட்ட 12 தங்கும் விடுதிகளின் தற்போதைய திட்ட வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜிடம் ஊட்டி தங்கும் விடுதிகள் சங்க தலைவர் சாதிக் அலி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஊட்டியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களும், தங்கும் விடுதியின் தற்போதைய திட்ட வரைபடத்தை இன்றுக்குள் (செவ்வாய்க்கிழமை) நகராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் கூறப்பட்டது. மேலும் இன்று முதல் சீல் வைக்கும் பணி தொடங்கும் என்று நகராட்சி கமி‌ஷனர் தெரிவித்து உள்ளார். ஊட்டியில் தங்கும் விடுதியை நம்பி ஏராளமான குடும்பத்தினர் உள்ளனர். சீல் வைத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஊட்டி சுற்றுலா தலமாக உள்ளதால், தங்கும் விடுதிகள் அவசியமானது. நாங்கள் தங்கும் விடுதி நடத்துவதின் மூலம் நகராட்சிக்கு வரி கட்டி வருமானம் ஈட்டி கொடுக்கிறோம். தங்கும் விடுதிகள் தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதால், இந்த தொழிலை நம்பி உள்ள உரிமையாளர்கள் பாதித்து வருகிறோம். எனவே, மாவட்ட கலெக்டர் திட்ட வரைபடத்தை பெற்றுக்கொண்டு சீல் வைக்கப்பட்ட 12 தங்கும் விடுதிகளை திறக்கவும், மற்ற தங்கும் விடுதிகளின் திட்ட வரைபடம் சமர்ப்பிப்பதை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story