கூடலூர் அருகே மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளை விரட்டக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


கூடலூர் அருகே மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளை விரட்டக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 July 2018 3:45 AM IST (Updated: 10 July 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளை விரட்டக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பை காட்டு யானை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 45 பேர் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்து உள்ளனர். 65–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி பகுதியில் குட்டியுடன் கூடிய காட்டு யானை ஒன்று வீடுகள் மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

காந்திநகர், பெரியசூண்டி, பார்வுட் பகுதிகளில் கடந்த 1 மாதமாக தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு பார்வுட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரது மளிகை கடையை குட்டியுடன் கூடிய காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது. பின்னர் உள்ளே இருந்த பொருட்களை தின்றதுடன், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் சேதப்படுத்தின. எனவே அதற்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என வனத்துறைக்கு கடை உரிமையாளர் சுரேஷ் கோரிக்கை மனு அளித்தார். ஆனால் இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனால் சேதம் அடைந்த கடையை தனது சொந்த செலவில் சுரேஷ் சீரமைத்து இரும்பு கதவுகளை பொருத்தினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு குட்டியுடன் வந்த காட்டு யானை சுரேஷின் கடையை 2–வது முறையாக இடித்தது. இதில் கடையின் முன்பக்கம் பொருத்தி இருந்த இரும்பு கதவுகள் பலத்த சேதம் அடைந்தன. மேலும் கடையில் வைத்து இருந்த பொருட்களையும் காட்டு யானைகள் தின்று சேதப்படுத்தின. இதை அறிந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஓவேலி வன காப்பாளர் பாலசுப்பிரமணி, வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் ஜீப்பில் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது இருளில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று வனத்துறையினரின் ஜீப்பை தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்தது. மேலும் வனத்துறையினரும் கூச்சலிட்டனர். இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களை காட்டு யானைகள் தள்ளி விட்டு சென்றன. இதனிடையே நேற்று காலை 7.30 மணிக்கு கிராம மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி கூடலூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், பிரகாஷ் மற்றும் வனச்சரகர்கள் குமார், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வன அலுவலர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு காணப்பட்டது.

இதேபோல் ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்றை மற்றொரு காட்டு யானை தாக்கியது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. அதன் உரிமையாளர் பெயர் மற்றும் விவரம் தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story