திருவள்ளூர் மாவட்டத்தில் பூச்சி கொல்லி மருந்துகள் வாங்கும் போது விலைப்பட்டியல் வழங்கா விட்டால் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை


திருவள்ளூர் மாவட்டத்தில் பூச்சி கொல்லி மருந்துகள் வாங்கும் போது விலைப்பட்டியல் வழங்கா விட்டால் நடவடிக்கை, கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 July 2018 10:00 PM GMT (Updated: 9 July 2018 7:16 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் பூச்சி கொல்லி மருந்துகள் வாங்கும் போது விலைப்பட்டியல் வழங்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி உர மானிய திட்டத்தின் கீழ் விற்பனை முனைக்கருவிகள் தனியார் விற்பனை நிலையத்திற்கு 140 எண்ணிக்கையிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு 111 எண்ணிக்கையிலும் மொத்தம் 251 விற்பனை முனைக்கருவிகள் அரசால் வழங்கப்பட்டு தகுதி வாய்ந்த வல்லுனர்களால் முறையான பயிற்சிகளும் 3 கட்டங்களாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 1–1–2018 முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் நேரடி மானிய திட்டத்தில் தங்களுக்கு தேவையான உரம் வாங்கும் போது ஆதார் எண் மற்றும் கைவிரல் ரேகை பதிவுடன் மட்டுமே வாங்கி கொள்ளவேண்டும். மேலும் இணையதள விலைப்பட்டியல் பெற்று கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விலைப்பட்டியல் வழங்கப்படுவதில்லை என விவசாயிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் விலை கொடுத்து வாங்கும் உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் விலைப்பட்டியல் தருவதில்லை என ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இணையதள விலைப்பட்டியல் வழங்காத உரவிற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985–ன்படியும், பூச்சி கொல்லி மருந்துகளுக்கு முறையான பட்டியல் வழங்காத பூச்சி மருந்து விற்பனை நிலையத்தின் மீது பூச்சி கொல்லி மருந்து சட்டம் 1968–ன்படியும், கடும் நடவடிக்கை எடுக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் வாங்கும் போது தவறாமல் உரிய விலைப்பட்டியலை கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும். விலை பட்டியலை உரமூட்டையில் உள்ள விலையுடன் சரிபார்த்து கொள்ளவேண்டும். ரசீதுகள் தரமறுக்கும் விற்பனை நிலையங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

மேலும் அனைத்து விவசாயிகளும் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி பயிருக்கு ஏற்ப என்ன உரம், என்ன பூச்சி கொல்லி மருந்து, எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு அதனை பயன்படுத்த வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story