திருவள்ளூரில் ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல் போராட்டம்
திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 455 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.
திருவள்ளூர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 3–ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 7–வது நாளாக ஊரக வளாச்சித்துறையை சேர்ந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தங்களது 27 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானம், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் வீரமணி, இணை செயலாளர்கள் ஜார்ஜ், கண்ணன், ஜெயசங்கர், மில்லர் உள்பட சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமலதா சித்ரா, திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். உடனடியாக அவரை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஊரக வளர்ச்சித்துறையினர் திடீரென திருவள்ளூர்–திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த 455 பேரை கைது செய்தனர். அவர்களை திருவள்ளூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.