தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல்
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் ஞானராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட 117 பேரை தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story