பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிய அய்யனார்கோவில் குளம் வறண்டது கிராம மக்கள் அவதி


பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிய அய்யனார்கோவில் குளம் வறண்டது கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 9 July 2018 10:15 PM GMT (Updated: 9 July 2018 7:32 PM GMT)

பல கிராமங்களுக்கு குடிநீர் கொடுத்த அய்யனார் கோவில் குளம் வறண்டு போனதால் தண்ணீரின்றி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்டது உடைச்சியார்வலசை கிராமம். இங்கு பஸ் நிலையம் அருகே பெரிய அளவிலான குடிநீர் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் தண்ணீர் மிகுந்த சுவையாக இருப்பதால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதனை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளத்தை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி மக்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு அரசு நிதியின் மூலம் குளத்தின் நாலாபுறமும் கருங்கற்களால் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு பொதுமக்கள் எளிதாக சென்று தண்ணீர் எடுக்கும் வகையில் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுஉள்ளது.

இதுதவிர ராமநாதபுரம்–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அந்த குளத்தின் அருகே தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் குடிநீர் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தாகம் தீர்த்து வந்த இந்த குளம் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் தண்ணீர் வற்றத்தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இதில் உள்ள சிறிய அளவிலான தண்ணீரை கால்நடைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அய்யனார் கோவில் குளத்தில் ஆழ்குழாய் அமைத்து அதன் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றும், அந்த குளத்தை சுற்றிலும் சில இடங்களில் சேதமடைந்துள்ள தடுப்புச்சுவர் மற்றும் படிக்கட்டுகளையும் சீரமைக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களிலும் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story