கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முற்றுகை, 138 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முற்றுகை, 138 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 4:15 AM IST (Updated: 10 July 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்பட 138 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சிவகங்கை,

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு, ஊதிய விகிதாசார முரண்பாடுகளை களைய வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று போராட்டத்தின் 7–வது நாளில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கருப்புசாமி, ஊரக வளர்ச்சித்துறை மகளிர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் உமா, மாவட்ட தலைவர் பிரபாகரன், செயலாளர் சுகுமாறன், துணைத்தலைவர் பாஸ்கரன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அழகேசன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பாண்டி, சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் முற்றுகை போராட்டத்தில ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் உள்பட 138 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைதுசெய்தனர்.


Next Story