மணல் இறக்குமதி அனுமதியை நலிந்துபோன பொதுத்துறை நிறுவனங்களிடம் வழங்க வேண்டும், ரங்கசாமி வலியுறுத்தல்


மணல் இறக்குமதி அனுமதியை நலிந்துபோன பொதுத்துறை நிறுவனங்களிடம் வழங்க வேண்டும், ரங்கசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 July 2018 11:15 PM GMT (Updated: 9 July 2018 7:54 PM GMT)

வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நலிந்துபோன பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசியதாவது:–

பட்ஜெட்டில் உள்ள குறைகளை அனைவரும் சுட்டிக்காட்டினார்கள். சிவா எம்.எல்.ஏ.வும் வேறு வழியில்லாமல் சபையில் உட்கார்ந்திருப்பதாக கூறினார். கடந்த ஆட்சியினை குறைகூறியே ஆட்சிக்கு வந்தோம் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் குறை ஒன்றும் இல்லை. தேர்தல் சமயத்தில் நாங்கள் எடுத்த சில முடிவுகளால் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ரூ.7,530 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எத்தனை கோடி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

அதுகுறித்து தெளிவான குறிப்புகள் ஏதும் இதில் இல்லை. மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 82 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள். அது எந்த துறையில்? சுகாதாரத்துறையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கக்கூட நிதியில்லை என்று கூறப்படுகிறது. தேவையான மருந்துகளும் உள்ளதா? பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? கல்லூரியில் படிக்கும் உரைபோல் பட்ஜெட் உரை உள்ளது.

பொதுவாக பட்ஜெட் என்றாலே மக்கள், வியாபாரிகளிடம் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் பட்ஜெட்டில் அவர்களுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு 18 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் 9 ஆயிரம் பேருக்குத்தான் உதவித்தொகை அறிவித்துள்ளீர்கள். விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகையை வழங்கவேண்டும்.

புதிய வரியில்லா பட்ஜெட் என்கிறீர்கள். ஆனால் வரிகளை முன்பே போட்டுவிட்டீர்கள். மனமகிழ் மன்றம் தேவையா? அதை யாரிடம் கொடுக்க போகிறீர்கள்? மகாபாரதத்தில் சூதாட்டத்தால்தான் தருமன் சகோதரர்களோடு காட்டுக்கு போனான். சூதாட்டம் என்பது பெரிய வியாதி. கோவா மாநிலத்தின் முதல்–அமைச்சர்கூட ஒரு மாநாட்டில் பேசும்போது, இதுபோன்ற செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுத்ததால்தான் தங்களது கலாசாரமே சீரழிந்துவிட்டதாக கூறினார்.

புதுவைக்கு புதிய தொழில் தொடங்க முன்வந்தவர்கள் ஓடிவிட்டதாக சிவா எம்.எல்.ஏ. கூறினார். மணல் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இறக்குமதி செய்வதென்றால் யாருக்கு அனுமதி கொடுக்க போகிறீர்கள்? இவற்றை நலிந்துபோன பொதுத்துறை நிறுவனங்களிடம் கொடுங்கள். பாசிக் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட 6 பார் லைசென்சை ஏன் கேன்சல் செய்தீர்கள்?

எதற்கெடுத்தாலும் கவர்னர் மறுப்பு தெரிவிக்கிறார். கோப்புகளை திருப்பி அனுப்புகிறார் என்று சொல்கிறீர்கள். இதற்காகத்தான் நாங்கள் தனி மாநில அந்தஸ்து கேட்கிறோம். நமக்கு அதிகாரம் இல்லாததால்தான் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுகிறது. சிறப்பு மாநில அந்தஸ்தும் இப்போது கிடைக்காது. நான் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தியபோது மத்திய மந்திரியாக இருந்த நீங்கள் நினைத்திருந்தால் மாநில அந்தஸ்து கிடைத்திருக்கும். மத்தியில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மாநில அந்தஸ்து முடிவில் நாம் தெளிவாக இருக்கவேண்டும்.

அதிகார வி‌ஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை யாராக இருந்தாலும் வரவேற்றுதான் ஆகவேண்டும். இருக்கும் அதிகாரத்தை எப்படி பயன்படுத்துவது என்று பாருங்கள். நான் ஆளுங்கட்சி வரிசையில் இருந்தபோதும் இதைத்தான் கூறினேன். இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் இல்லை.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேசினார்.


Next Story