புதுவை மாநிலத்தில் உயர்த்தப்பட்ட வரிகளை திரும்ப பெற வேண்டும், அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


புதுவை மாநிலத்தில் உயர்த்தப்பட்ட வரிகளை திரும்ப பெற வேண்டும், அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 7:54 PM GMT)

புதுவை மாநிலத்தில் உயர்த்தப்பட்ட வரிகளை திரும்ப பெற வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

பட்ஜெட்டில் புதுவை மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி ரூ.1,476 கோடி என தெரிவித்தவுடன் மார்ச் மாதமே நாம் பட்ஜெட்டை போட்டிருக்கலாம். 4 மாதத்திற்கு முன் செலவினங்களுக்கு மட்டும் பெறப்பட்டது. தற்போது மீதமுள்ள 8 மாதத்திற்குரிய செலவினங்களுக்கு அனுமதி மட்டும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஏனெனில் இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. மாநில வளர்ச்சிக்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை. இது ஏதோ கட்டுரை உரை போன்று இருக்கிறது.

கடந்த ஆட்சியில் சிறந்த நிர்வாகம் இருந்ததோ இல்லையோ, வாக்களித்த மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஆனால் தற்போது அறிவித்த திட்டங்களை கூட செயல்படுத்தப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கணக்கு தொடங்கிய நிலையில், மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்காதது மத்திய அரசு நமக்கு செய்யும் மிக பெரிய துரோகமாகும். எனவே, 15–வது நிதிக்குழுவில் புதுவை சேர்க்க புதுவை அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்.

புதுவை மாநில வரவு செலவு திட்ட ஒதுக்கீடு ரூ.7,530 கோடி, மாநில நிதி ஆதாரம் ரூ.4,570 கோடி, மத்திய நிதி உதவி ரூ.1,476 கோடி, மத்திய ஊக்குவிப்பு திட்ட உதவி ரூ.409 கோடி, மீதமுள்ள பற்றாக்குறை ரூ.1,075 கோடியில் நீங்கள் ரூ.1050 கோடி வெளியில் இருந்து கடன் வாங்குவதாக கூறியுள்ளீர்கள். மீதி ரூ.25 கோடி யார் கொடுப்பது?.

இந்த கணக்கை தவறாக போட்ட நிதி செயலாளர் கொடுப்பாரா? நாலு வரி கணக்கை கூட ஒழுங்கா போட முடியாதவர்கள் எப்படி தவறில்லாமல் பட்ஜெட் போட முடியும். மேலும், வெளிக்கடன் வாங்க அனுமதிக்கமாட்டேன் என கவர்னர் கூறியுள்ளார். அவர் அனுமதிக்கவில்லை என்றால், இந்த பட்ஜெட் வெறும் வெத்து பேப்பர் செய்தி என்பதை மறந்துவிட கூடாது.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும். கடந்தாண்டு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் 5 பேர் மட்டுமே சென்டாக் மூலம் மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்தனர். ஆனால் கல்வித்துறைக்கு அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டும். புதுவை மாநில வளர்ச்சி 11.4 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி என்பது வருவாய், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

காரைக்காலில் 3–ல் ஒரு பங்காக விவசாயம் குறைந்துள்ளது. அரசு புதிய தொழிற்கொள்கை அறிவித்தும் பாதிக்கு மேல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்தி வளர்ச்சி எங்கிருந்து வருகிறது. புதுவையில் உள்ள சில மாபியா கும்பல்கள் தொழிற்சாலைகள், கடைகளில் மாமூல் வசூலிக்கின்றனர். இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் இயங்கும் 7 தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத இடங்களை பெற உரிய சட்டத்தை கொண்டுவர வேண்டும். அரசு 26 மாதங்களில் 7 முறை தான் இலவச அரிசி வழங்கியுள்ளனர். சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக இடம் எடுக்கப்பட்டது. ஆனால் அங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் இன்னும் தொடங்க வில்லை என்றால் அந்த இடத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாத அரசாக உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ. சி.டி. ஸ்கேன் எந்திரங்கள் இன்னும் வாங்கப்படவில்லை. ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கிற்கு ரூ.5 கோடியில் ஏ.சி. எந்திரம் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் வாங்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பஸ் கட்டணம் உயர்வு, குப்பை வரி, தண்ணீர் வரி உயர்வு, மின்சார கட்டண வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு இவையெல்லாம் மறுபரிசீலுனை செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தில் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வேண்டும். ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் உரை என்பது உப்புசப்பு இல்லாத பட்ஜெட் என தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story