மாவட்ட செய்திகள்

தனியார் படகு குழாம் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு + "||" + Private boat faction issue: Congress MLA MNR Pallan walked out of the assembly

தனியார் படகு குழாம் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

தனியார் படகு குழாம் விவகாரம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
தனியார் படகு குழாம் அனுமதி விவகாரம் தொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் தனியார் படகு குழாம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–

அன்பழகன்–எம்.என்.ஆர்.பாலன்: தனியார் படகு குழாம் அமைப்பதற்கு சுண்ணாம்பாற்று படுகையில் எந்த அடிப்படையில் அரசு அனுமதி வழங்கியுள்ளது? இதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா? இதற்கு எந்த துறையால், யாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?

முதல்–அமைச்சர் நாராயணசாமி: துணிகர சுற்றுலா செயல்பாடுகள் மற்றும் நீர் விளையாட்டுகளை சிறப்பாக செய்வதன் மூலம் அரசுக்கு நேரடி வருவாய் ஈட்ட முடியும் என்ற நோக்கில் பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விளையாட்டு செயல்பாடுகளைபோல புதுச்சேரியிலும் நீர் விளையாட்டு மற்றும் துணிகர விளையாட்டுகளில் தனியாரை அனுமதிப்பதென சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டி குறிப்பேடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழிகாட்டி குறிப்பேடு தயாரிக்கப்பட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். ஆழ்கடல் நீச்சல், நிலத்தில் நடைபெறும் துணிகரை விளையாட்டுகள், நீரில் நடைபெறும் துணிகர விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகளுக்கு சுற்றுலாத்துறை மூலம் ஆதரவு கடிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நீர் விளையாட்டுகளுக்காக வழிகாட்டுதலுக்கான அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே உரிய அனுமதி வழங்கப்படும்.

எம்.என்.ஆர்.பாலன்: தனியார் படகு குழாம் அனுமதி தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா? அனுமதி கொடுக்க துறை இயக்குனருக்கு அதிகாரம் உள்ளதா? அவர் இதுதொடர்பாக அமைச்சரிடம் கேட்டாரா? பல வகையில் வரி என்று மக்களை கொடுமைப்படுத்துகிறோம். இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது?

அன்பழகன்: அரசு கொள்கை முடிவு எடுக்காமல் அனுமதி தந்தது எப்படி? இதற்கு சுற்றுலாத்துறை மூலம் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் சுற்றுலாத்துறையில் அரசு பங்களிப்புடன், தனியார் பங்களிப்பும் உள்ளது. தற்போது நீர் விளையாட்டு தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு சட்டத்துறையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புக்கு 10 பேர் விண்ணப்பித்தனர். அதில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மீன்வளத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் ஒப்புதல் பெறவேண்டும் என்பதால் சுற்றுலாத்துறை மூலம் ஆதரவு கடிதம் தரப்பட்டது. இதற்கும் சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. விதிமுறை வகுத்தபின் விதிமுறைக்கு உட்பட்டு படகு குழாம் நடத்தவேண்டும். இப்போத அந்த படகு குழாம் செயல்படவில்லை.

அன்பழகன்: அங்கு தனிநபர் தனக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்துடன் அரசு நிலம் 20 ஆயிரம் சதுர அடியை வளைத்துப்போட்டு வேலை செய்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

அரசு கொறடா அனந்தராமன்: சுற்றுலாத்துறையை பொறுத்தவரை இன்னும் அதிக அளவில் தனியார் பங்களிப்பு வேண்டும். அரசு நடத்தும் நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டம்தான். அதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறோம். எனவே தனியார் திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும். தற்போது சுண்ணாம்பாறு படகு குழாமில் கூட சுற்றுலா பயணிகளுக்கு போதுமான வசதியில்லை. பல நாட்கள் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

லட்சுமிநாராயணன்: தனியாருடன் அரசும் சேர்ந்து செயல்படவேண்டும். அப்படி செய்தால் அவர்களை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

எம்.என்.ஆர்.பாலன்: இதில் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை வையுங்கள்.

நாராயணசாமி: படகு குழாம் தொடங்க இன்னும் தனியாருக்கு அனுமதி தரவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்தான் அனுமதி தருவோம்.

எம்.என்.ஆர்.பாலன்: எனது கேள்வியின் நோக்கமே திசைமாற்றப்பட்டுள்ளது. அனுமதி தர துறை இயக்குனருக்கு என்ன அதிகாரம் உள்ளது? இதில் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முறைகேட்டை விசாரிக்க தவறுகிறீர்கள். அதனால் வெளிநடப்பு செய்கிறேன்.

(இவ்வாறு கூறிவிட்டு எம்.என்.ஆர்.பாலன் சபையைவிட்டு வெளியேறினார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே சட்டசபையில் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது)

அன்பழகன்: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்கிறார். இது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல்.

சிவா: தனியார் படகு குழாம் வைக்கும்போது சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

நாராயணசாமி: தனியார் படகு குழாம் தொடர்பாக பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டது. இது 2015–ம் ஆண்டு நடந்தது.

இவ்வாறு விவாதம் நடந்தது.