சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர், பாடிக்கு மின்சார ரெயில் மீண்டும் இயக்கப்படுமா?


சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர், பாடிக்கு மின்சார ரெயில் மீண்டும் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 9 July 2018 10:30 PM GMT (Updated: 9 July 2018 8:17 PM GMT)

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர், பாடிக்கு மீண்டும் மின்சார ரெயில் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை,

சென்னை மூர்மார்க்கெட்- அரக்கோணம் வழித்தடத்தில் வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணாநகர் ரெயில் நிலையத்துக்கு செல்லும் வகையில் 3.09 கி.மீ. தூரத்தில் புதிதாக ரெயில்வே பாதை அமைக்கப்பட்டது. ரூ.7.29 கோடியில் இந்த வழித்தடத்தில் நடைமேடை, மின்சார விளக்குகள், சிக்னல்கள், டிக்கெட் கவுண்ட்டர்கள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.

இந்த வழித்தடத்தில் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக அண்ணா நகருக்கு 5 மின்சார ரெயில்கள் 2003-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டன. இதனால் சென்னை கடற்கரை, பேசின் பிரிட்ஜ், பெரம்பூர் பகுதிகளில் இருந்து அண்ணாநகர், பாடிக்கு செல்வதற்கும், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் பயனடைந்தனர்.

கடந்த 2007-ம் ஆண்டு பாடி மேம்பாலத்துக்கான கட்டுமான பணியின்போது, தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக அண்ணாநகர், பாடி ஆகிய 2 ரெயில் நிலையங்களும் மூடப்பட்டன. மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்பும் மூடப்பட்ட அந்த 2 ரெயில் நிலையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை. போதிய அளவில் கூட்டம் இல்லை என்பதால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இந்த வழித்தடம் 4 ஆண்டுகளிலேயே மூடு விழா கண்டது. அண்ணாநகர், பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள்தொகை பெருக்கம் முன்பை விட தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை காணமுடியும்.

சென்னையில் உள்ள மின்சார ரெயில் நிலையங்களோடு இணைக்கும் வகையிலேயே மெட்ரோ ரெயில் வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், பரங்கிமலை உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு எளிதில் மாறிச்செல்லும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. இதன்மூலம் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்யலாம்.

அந்தவகையில் அண்ணாநகர், பாடி ரெயில் நிலையங்களில் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்கி, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தோடு இணைப்பதற்கு சுமார் 1.5 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைத்தாலே போதுமானது. இதன்மூலம் திருமங்கலத்தில் இருந்து, அண்ணாநகர் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் செல்லலாம்.

கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்கு மீண்டும் ரெயில்களை இயக்குவதன் மூலம் அலுவலகம், கம்பெனிகளுக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் தனிநபர் வாகன பயன்பாட்டையும் குறைக்க முடியும். இதன் மூலம் சாலை மார்க்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.

எனவே தற்போது பாழடைந்த நிலையில் புதர் மண்டி இருக்கும் அண்ணாநகர், பாடி ரெயில் நிலையங்களை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். இதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story