டாஸ்மாக் பாராக மாறிய மாநகராட்சி விளையாட்டு திடல், சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


டாஸ்மாக் பாராக மாறிய மாநகராட்சி விளையாட்டு திடல், சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 July 2018 10:30 PM GMT (Updated: 9 July 2018 8:17 PM GMT)

பெரவள்ளூரில் டாஸ்மாக் பாராக மாறிய மாநகராட்சி விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூரில் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆனந்தன் விளையாட்டு திடல் உள்ளது. இந்த விளையாட்டு திடலுக்கு ஒருபுறம் கணக்கர் தெருவும் மறுபுறம் தான்தோன்றி அம்மன் கோவில் தெருவும் உள்ளது.

இந்த ஆனந்தன் விளையாட்டு திடலானது வாலிபர்கள் விளையாட கூடிய கால்பந்து, கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டு விளையாடுவதற்கு ஏற்ற திடலாக இல்லாமல் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த பகுதியில் உள்ள சின்னசாமி தெரு, நாராயணன் தெரு, மூர்த்தி தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள குழந்தைகள் இந்த விளையாட்டு திடலை பயன்படுத்தி வந்தனர். இந்த பூங்காவிற்கு அருகில் உள்ள தான்தோன்றி அம்மன் கோவில் தெருவில் சிவன் கோவில் மற்றும் தான்தோன்றி அம்மன் கோவில்கள் உள்ளன.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த விளையாட்டு திடலை கோவில் பணிக்கு பயன்படுத்தும் வகையில், திடலில் இருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை மாநகராட்சி அதிகாரிகளின் அனுமதியோடு கோவில் நிர்வாகிகள் அகற்றியதாக கூறப்படுகிறது.

ஆனால் கோவில் திருவிழா முடிந்த நிலையில் திடலில் இருந்து அகற்றப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் திரும்ப வைக்கப்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் விளையாட்டு திடலுக்கு அருகிலேயே உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பலமுறை கேட்டதாகவும், ஆனால் முறையான பதில் அளிக்க உதவி பொறியாளர் மறுத்து வருவதாகவும் தெரிகிறது.

தற்போது எந்தவித பரா மரிப்பும் இன்றி உள்ள இந்த விளையாட்டு திடலின் இரு புறமும் உள்ள கேட் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் இங்குள்ள இருக்கைகள் மற்றும் நடைமேடையில் அமர்ந்து மது அருந்துவதும், கஞ்சா புகைப்பதும் மட்டுமின்றி அங்கேயே படுத்துக்கொள்கின்றனர்.

பெரவள்ளூரில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை விட இந்த விளையாட்டு திடல் வசதியாகவும், சுத்தமாகவும் இருப்பதாக மது பிரியர்கள் இங்கு அமர்ந்தபடி குடிக்கின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்த விளையாட்டு திடலை சீரமைத்து முன்பு இருந்தது போல் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைத்து தரவேண்டும்.

இருபக்கமும் உள்ள இரும்பு கேட்டை மூடி சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த திடலில் இருந்து தினமும் 40 முதல் 60 மதுபாட்டில்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கிளாஸ், காலி தண்ணீர் பாக்கெட்டுகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருவதாக தெரிவித்தனர்.

இந்த திறந்தவெளி விளையாட்டு திடலுக்கு வெளியே கேட் அருகில் பார்வை நேரம் என்று நேரம் குறிப்பிடப்பட்டிருப்பது எதற்கு என்பது இதுவரை எங்களுக்கு புரியவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் நகைக்கின்றனர்.

Next Story