மாவட்ட செய்திகள்

கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தல் + "||" + Shankaramaram cut in the Kamburai Perumal temple complex

கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தல்

கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் சந்தனமரம் வெட்டி கடத்தல்
கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கம்பம்,

தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், கம்பம் கம்பராய பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தினமும் வந்து செல்வர். இதையொட்டி தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு, கோவிலின் நுழைவு வாயிலை அடைத்து விட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கோவில் வளாகத்துக்குள் புகுந்தனர். பின்னர் கோவிலின் மேற்குப்புற நுழைவு வாயில் பகுதியில் நின்றிருந்த சந்தன மரத்தின் ஒரு கிளையை, அறுவை எந்திரம் மூலம் அறுத்து எடுத்து சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த பணியாளர்கள், சந்தனமரக்கிளை வெட்டி கடத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் செந்தில்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் இதுதொடர்பாக கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் புகார் செய்தார். அதில், கோவில் வளாகத்தில் இருந்த சந்தனமரக்கிளையை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரக்கிளை வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.