உசிலம்பட்டி அருகே ஜன்னல் சிலாப் உடைந்து விழுந்து மாணவன் சாவு


உசிலம்பட்டி அருகே ஜன்னல் சிலாப் உடைந்து விழுந்து மாணவன் சாவு
x
தினத்தந்தி 9 July 2018 11:45 PM GMT (Updated: 9 July 2018 8:35 PM GMT)

உசிலம்பட்டி அருகே பள்ளிக்கட்டிட மேற்கூரையில் விழுந்த பந்தை எடுக்க சென்ற மாணவன் ஜன்னல் சிலாப் உடைந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தான்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கீரிபட்டி, இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராகவன் (வயது 11). அங்குள்ள கள்ளர் பள்ளியில் 6–ம்வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் மாணவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையில் மாணவன் விளையாடிக் கொண்டிருந்த பந்து விழுந்து விட்டது. அந்த பந்தை எடுப்பதற்காக பள்ளிக் கட்டிடத்தின் ஜன்னல் பகுதி சிலாப்பை பற்றி தொங்கியபடி மேலே ஏறியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஜன்னலின் சிலாப் உடைந்தது.

அதில் மாணவன் ராகவன் தவறி கீழே விழுந்தான். அப்போது ஜன்னல் சிலாப்பின் செங்கல் பகுதி பெயர்ந்து மாணவன் மீது விழுந்தது. அதில் பலத்த காயமடைந்த ராகவன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவன் ராகவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story