மாவட்ட செய்திகள்

அரிசி வியாபாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு + "||" + Rice dealer murder case: Life sentence to life imprisonment for 8 people

அரிசி வியாபாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

அரிசி வியாபாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
அரிசி வியாபாரி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
சேலம்,

சேலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 25). சேலம் காத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் அய்யாவு. இருவரும் அரிசி வியாபாரிகள். மேலும் இருவரும் தனித்தனி கோஷ்டியாக சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.


இதைத்தொடர்ந்து இருதரப்பு புகார் குறித்து போலீசார் அவ்வப்போது விசாரணை செய்து வந்தனர். ஆனால் இவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் இருதரப்பினரும் முன் விரோதத்திலேயே இருந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2.3.2010 அன்று சேலம் மத்திய சிறையில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் மோகன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மதியம் 1 மணி அளவில் அவர் சேலம் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் அருகே வந்தார்.

அப்போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மோகன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து மோகன் கீழே விழுந்தார். பின்னர் அவர் அங்கிருந்து ஓடி தப்ப முயன்றார். ஆனால் மர்ம ஆசாமிகள் அவரை விரட்டி சென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் மோகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான முரளி என்கிற முரளிதரன் (வயது34), கார்த்திக் என்கிற முரளி கார்த்திக் (33), மூர்த்தி (37), சண்முகபாண்டியன் (39), ஆறுமுகம் (33), வெங்கடேஷ் (56), அரைமூக்கன் என்கிற செல்வம் (34), மற்றும் சதீஷ் என்கிற வளர்ந்த சதீஷ் (40), ரகு என்கிற மேட்டு ரகு (37), அய்யாவு ஆகிய 10 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சேலம் 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது சதீஷ் என்கிற வளர்ந்த சதீஷ் இறந்து போனார்.

இந்த கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் இருந்த 9 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முரளிதரன், முரளிகார்த்திக், மூர்த்தி, சண்முகபாண்டியன், ஆறுமுகம், வெங்கடேஷ் , அரைமூக்கன் என்கிற செல்வம், ரகு என்கிற மேட்டு ரகு (37) ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 8 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அய்யாவுவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து முரளிதரன், முரளிகார்த்திக், ரகு என்கிற மேட்டுரகு ஆகிய 3 பேர் சேலம் மத்திய சிறையிலும், மற்ற 5 பேர் கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் தமிழரசன் வாதாடினார்.

அரிசி வியாபாரி மோகன் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் சேலம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று காலையிலேயே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சேலத்தில் நடந்த கொலை வழக்கில் 8 பேருக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.