விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகள்-பணம் திருட்டு போலீசார் விசாரணை


விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகள்-பணம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 July 2018 4:00 AM IST (Updated: 10 July 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது. அவற்றை காரில் வந்த மர்ம நபர்கள் திருடிச்சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனி பாரத் நகரில் வசிப்பவர் ரவி. விவசாயி. இவருடைய மனைவி சித்ரா(வயது 42). இவர்கள் நேற்று முன்தினம் காலை திருச்சி கே.கே.நகரில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து ரவி மற்றும் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் இந்த பகுதியில் கார் ஒன்று நின்றதாக தெரிவித்தனர். ஆகவே, காரில் வந்த மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story