கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்து மோசடி: வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை


கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்து மோசடி: வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 July 2018 4:15 AM IST (Updated: 10 July 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

தா.பேட்டை அருகே வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்த பல லட்சம் ரூபாய் எடுத்து மோசடி செய்யப்பட்டதாக கூறி, அந்த வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தா.பேட்டை,

தா.பேட்டையை அடுத்த தும்பலம் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு தும்பலம், சூரம்பட்டி, சிட்டிலரை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கி வரவு, செலவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு இருப்பில் இருந்து பணம் அவ்வப்போது குறைந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, சரியான முறையில் பதில் சொல்லாமல் சமாளித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தும்பலத்தை சேர்ந்த சித்ராவின் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரமும், மணியின் கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரமும், சூரம்பட்டியை சேர்ந்த ராமலிங்கத்தின் கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், சண்முகத்தின் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரமும், சிட்டிலரை சரவணனின் கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரமும், அரவனின் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரமும் என வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களுடைய கணக்கு புத்தகத்தை வங்கியில் ‘எண்ட்ரி‘ செய்து பார்த்தபோது, பணம் குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வாடிக்கையாளர்கள் இது குறித்து வங்கியில் சென்று கேட்டபோது அங்கிருந்த தற்காலிக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களை மிரட்டியதாக தெரிகிறது. அந்த ஊழியர், பல வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் எடுத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் வாடிக்கையாளர்கள் நேற்று வங்கியை முற்றுகையிட்டு அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முசிறி - தும்பலம் சாலையில் வங்கி முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் அனைத்தையும் ஆய்வு செய்து வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள பணம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story