பஸ் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மாணவ-மாணவிகளால் பரபரப்பு


பஸ் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மாணவ-மாணவிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2018 4:30 AM IST (Updated: 10 July 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

பஸ் வசதி கேட்டு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவ- மாணவிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு அவர்கள் சென்றனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி குடிநீர் பிரச்சினை, தெரு விளக்கு பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். மொத்தம் 314 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா குண்டாங்கல்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அமைக்கப்பட்ட 4 ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து நீண்ட நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். மேலும் குடிநீருக்காக மக்கள் பல இடங்களுக்கு அலைந்து திரிய வேண்டியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் காலையில் தண்ணீருக்காக அலைவதால் குறித்த நேரத்தில் புறப்பட்டு வெளியே செல்ல முடிவதில்லை. எனவே பழுதடைந்த ஆழ்குழாய் கிணற்றை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

உப்பிடமங்கலம் மேல்பாகம் சமத்துவபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைவதோடு அடிக்கடி விபத்துகளும் நிகழ்கிறது. எனவே புதிதாக தார்ச்சாலை வசதி அமைத்து தர வேண்டும். மேலும் தெருக் களில் பழுதடைந்து காணப் படும் மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும். கழிப்பிட வசதி இல்லாததால் சுகாதார வளாகம் கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு குறிப்பிட்டிருந்தனர்.

கரூர் அருகே மணவாடி, பெரியார் காலனி, பிஸ்மி காலனி, அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவ- மாணவிகளை அழைத்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், எங்களது குழந்தைகள் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஊரிலிருந்து சில கிலோ மீட்டர் தூரம் கடந்து தான் பள்ளிக்கு செல்கின்றனர். இதற்கிடையே உள்ள ரெயில்ரோடு பகுதியில் நடமாடும் சிலர், மாணவிகளை கேலி செய்வது, கடத்தி விடுவதாக மிரட்டுவது? உள்ளிட்ட அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர். எனவே பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் அரசு பஸ்சினை மணவாடி ஊரிலிருந்து அய்யம்பாளையத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். முன்னதாக குழந்தைகளை கலெக்டர் அலுவலகத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? என கேட்டு அவர்களிடம் கரூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா விசாரித்தார். இனி இது போல் பள்ளி படிப்பை கெடுத்து குழந்தைகளை கூட்டி வராதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் தென்பாகம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள தொட்டியபட்டியில் 120 ஏக்கர் பரப்பளவில் பாசன குளம் தூர்ந்து போய் உள்ளது. எனவே இதில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். குளத்தின் மதகினை சீரமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனை விற்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படுவதை காண முடிகிறது. எனவே உணவு பாதுகாப்புத்துறையினர் முறைப்படி ஆய்வு செய்து புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமானிய மக்கள் நலக்கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா குப்பாச்சிபட்டியை சேர்ந்த துளசியம்மாள் (60) கொடுத்த மனுவில், நான் குளித்தலையில் உள்ள ஒரு வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கரும்பு பயிருக்கு கடன் வாங்கியதை சுட்டி காட்டி, வங்கி நிர்வாகத்தினர் ஓய்வூதியத்தை பிடித்தம் செய்கின்றனர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். முடிவில் இந்த மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் பாலசுப்ரமணி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story