ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை


ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 9:33 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் இறுதியில் பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக குடகு, மாண்டியா, கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட இடங் களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடகு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

அணையின் பாதுகாப்பு கருதி உபரித்தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 2,600 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,600 கனஅடியாக அதிகரித்தது. மதியம் 1 மணியளவில் வினாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரித்தது. மாலை 5 மணிக்கு வினாடிக்கு 25,000 கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நேற்று மதியம் 1 மணி முதல் தடை விதித்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் போலீசார், தீயணைப்பு துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபினியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறை கடந்து கோட்டையூர், பண்ணவாடி வழியாக நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து இரவில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர வாய்ப்பு உள்ளது. மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அணையில் இருந்து விரைவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். 

Next Story