பாளையங்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் 7 பேர் கைது
பாளையங்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்- இன்ஸ்பெக்டர் சாமி ஆகியோர் தலைமையில் போலீசார் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தாழையூத்தை சேர்ந்த எஸ்டேட் மணி (வயது 37), பாளையங்கோட்டையை சேர்ந்த அரிகரன் (34), பிச்சுமணி (30), சென்னையை சேர்ந்த இனியதமிழன் (23), மானூரை சேர்ந்த சரவணன் (26), பாபநாசத்தை சேர்ந்த ரமேஷ் (33), தாழையூத்தை சேர்ந்த வர்கீஸ் (27) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதில் எஸ்டேட் மணி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கர ஆயுதங்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story