விண்வெளியில் வாழச்செல்லும் எலிகள்!


விண்வெளியில் வாழச்செல்லும் எலிகள்!
x
தினத்தந்தி 10 July 2018 10:30 AM GMT (Updated: 10 July 2018 10:30 AM GMT)

மனிதன் செவ்வாய் கிரகத்துக்கோ அல்லது என்சிலாடஸ் நிலவுக்கோ செல்லவே இன்னும் பல வருடங்கள் ஆகும்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ எனும் முதுமொழிக்கு பூமியும், பூமி மீதான மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களின் வாழ்க்கையும் விதிவிலக்கல்ல என்பது மெல்ல மெல்ல உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

பூமியானது மனித வாழ்க்கைக்கான வசதிகளை வெகுவாக இழந்துவிட்டது மற்றும் ஆபத்துகள் அதிகரித்துள்ளது ஒருபுறமிருக்க, மனிதன் ஒரேயொரு கோளைச் (பூமியை) சார்ந்து வாழ்வதை தவிர்த்து பல்வேறு கோள்கள், கோள்களின் நிலவுகள் என விண்வெளியின் பல்வேறு பகுதிகளில் வாழ முடியும் என்று நம்பத் தொடங்கிவிட்டான்.

அதற்குக் காரணம், விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்குத் திரும்ப உதவும், முக்கியமாக, விண்வெளிக்கு பலமுறை சென்றுவரக்கூடிய திறன்கொண்ட மறுபயனுறு ராக்கெட் போன்ற அதிநவீன மற்றும் பாதுகாப்பான விண்வெளி போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள்தான்.

ஆனால், விண்வெளிக்கு சுலபமாக சென்றுவர உதவும் ராக்கெட்டுகளை உருவாக்கிவிட்டால் போதுமா? ஏன் போதாது என்று கேட்டால், உதாரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு அங்குள்ள அதீதமான குளிர் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மட்டும்தான் பிரச்சினையாக இருக்கும். ஆனால், பூமியிலிருந்து விண் வெளிக்கு சென்று வருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஏனெனில், தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சிகள் எதுவும் இல்லாமல் விண்வெளிக்குள் நுழையும் மனிதர்களுக்கு கண் பார்வை இழப்பு, புற்றுநோய் மற்றும் உளவியல் கோளாறுகள் என பல ஆரோக்கியக் கேடுகள் ஏற்படும் என்பது பல விண்வெளி ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆனால், நீண்டகால விண்வெளி வாழ்க்கையானது மனித உடலை எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. முக்கியமாக, விண்வெளியில் மனித வாழ்க்கைக்கு உகந்த இடமாக, கோளாக செவ்வாய் கிரகம் மற்றும் சனிக்கிரகத்தின் நிலவான என்சிலாடஸ் ஆகியவை இருக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் தொடர்ந்து பல விண்வெளி ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மனிதன் செவ்வாய் கிரகத்துக்கோ அல்லது என்சிலாடஸ் நிலவுக்கோ செல்லவே இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்கு முன்னர், மனிதன் விண்வெளியில் பல ஆண்டு காலம் வாழும்போது அவனுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கியக் கேடுகள், ஆபத்துகள் குறித்த திட்டவட்டமான புரிதல்கள் மற்றும் தகவல்களை சேகரிக்க வேண்டியது தற்போது மிகவும் அவசியம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது தொடர்பான விண்வெளி ஆய்வுகளுக்கு மனிதர்களை பயன் படுத்துவது தற்போது சாத்தியமில்லை. ஏனெனில், மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய் உள்ளிட்ட பொதுவான பல நோய்கள் மீதான ஆய்வுகள் முதலில் பெரும்பாலும் குரங்குகள், எலிகள் உள்ளிட்ட, மனிதனுடன் பல மரபியல், உயிரியல் ஒற்றுமைகள் கொண்ட சோதனைக்கூட விலங்குகள் மீதுதான் மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் பலமுறை நிரூபிக்கப்பட்ட பின்னரே மனிதர்கள் மீதான ஆய்வுகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஒரு விண்வெளி ஆய்வில், இரட்டையர் விண்வெளி வீரர்களான ஸ்காட் கெல்லி மற்றும் அவரது சகோதரர் மார்க் கெல்லி ஆகியோரில், ஸ்காட் கெல்லியை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு வருடம் வாழச் செய்தனர். ஆனால் அதேசமயம், மார்க் கெல்லியை பூமியில் வாழச்செய்தனர்.

அந்த ஆய்வில், ஸ்காட் கெல்லியின் ஒருவருட விண்வெளி வாழ்க்கை 7 சதவீத மரபணுக்களின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற முதற்கட்ட முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மேலும் பல ஆய்வு முடிவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே ஆய்வுக்கூடத்தைச் (நார்த் வெஸ்டர்ன் சென்டர் பார் ஸ்லீப் அண்டு சர்கேடியன் பயாலஜி/ Northwestern University’s Center for Sleep and Circadian Biology (CSCB) சேர்ந்த ஆய்வாளர்கள் தற்போது, 20 எலிகளை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விரைவில் அனுப்பவிருக்கின்றனர். மேலும், அந்த எலிகளின் இரட்டையர் சகோதர எலிகளை (மொத்தம் 20) பூமியில் வைத்து கண்காணிக்க இருக்கின்றனர். முக்கியமாக, விண்வெளி மையத்துக்குச் செல்லும் எலிகளில் 10 விண்வெளியில் தொடர்ந்து 90 நாட்களும், மீதமுள்ள 10 எலிகள், 30 நாட்களில் மீண்டும் பூமிக்கு திரும்பிவிடும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

மேலும், விண்வெளியில் வாழும் எலிகளுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம், மற்றும் செயல்பாடுகள்/வேலைகள் அத்தனையும் பூமியிலுள்ள 20 எலிகளுக்கும் கொடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில், விண்வெளியின் சூழலானது எலிகளின் 24-மணி நேர உயிரியல் செயல்பாடுகள், எலிகளின் உடலுக்குள் வாழக்கூடிய பாக்டீரியா மற்றும் இதர நுண்ணுயிரிகள் மற்றும் எலிகளின் இதர உடலியல் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் எந்த வகையில் பாதிக்கிறது என்று கண்டறியத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் கவனிக்கத்தக்க முக்கியமான ஒரு தகவல் என்னவெனில், எலிகளின் 90 நாள் விண்வெளி வாழ்க்கையானது மனிதர்களின் 9 வருட வாழ்க்கைக்கு நிகரானது என்பதே. எனவே, இந்த ஆய்வின் முடிவுகள் மனிதனின் விண்வெளி வாழ்க்கை குறித்த முக்கியமான அறிவியல், உயிரியல் தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. 

Next Story