துபாய் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


துபாய் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 10 July 2018 11:00 PM GMT (Updated: 10 July 2018 5:24 PM GMT)

துபாய் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

செம்பட்டு,

துபாயில் இருந்து திருச்சிக்கு தினமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது. திருச்சிக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்ததும் பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் துபாய் புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துபாயில் இருந்து வந்த விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் அதில் ஏற தயாராகினர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானி விமானத்தை சோதனையிடுவது வழக்கம். அதுபோல சோதனையிட்ட போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். மேலும் விமானநிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. இதைதொடர்ந்து விமானத்தில் ஏற இருந்த பயணிகள் அனைவரும் விமானநிலைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

குறிப்பிட்ட விமானத்தில் பயணிக்க முடியாததால் பயணிகள் அவதி அடைந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நேற்று அதிகாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

அந்த விமானத்தில் 55 பயணிகள் துபாய்க்கு பயணம் செய்தனர். மற்ற பயணிகளில் சிலர் பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பி சென்றனர். பயணத்தை ரத்து செய்யாத 38 பயணிகளுக்கு தங்குவதற்காக அருகில் ஒரு ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டன. அதில் பயணிகள் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மாற்று விமானம் நேற்று மதியம் 2 மணி அளவில் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் 38 பயணிகளும் ஏறி திருவனந்தபுரம் சென்றனர். அங்கிருந்து இணை விமானம் மூலம் துபாய் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சியில் துபாய் விமானம் புறப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் விமானநிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story