கணவரை கொன்ற வழக்கில் கைதான மனைவி உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
ஓமலூர் அருகே கணவரை கொன்ற வழக்கில் கைதான மனைவி உள்பட 3 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். மது வாங்கி கொடுத்து கல்லால் தாக்கி கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம், தொளசம்பட்டியை அடுத்த ஊ.மாரமங்கலம் ஏரி அருகே கடந்த 7–ந்தேதி ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றி தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி காக்கியானூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக சுரேஷ் படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி அலமேலுவை போலீசார் கைது செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவரது கள்ளக்காதலன் சிந்தாமணியை சேர்ந்த ஜோதிடர் சுந்தரம் விஷம் குடித்து விட்டார். இதனால் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நேற்று முன்தினம் சுந்தரத்தின் நண்பரான சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்குமார்(23) என்பவரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் நேற்று காலை ஓமலூர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். போலீசில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது–
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியில் சுந்தரத்துக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். செம்மாண்டம்பட்டியில் குடி இருந்த போது ஜோதிடம் பார்க்க வந்த சுந்தரத்துக்கும், சுரேஷின் மனைவி அலமேலுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் தனது கள்ளக்காதலியை சுந்தரம் பொம்மிடிக்கு அழைத்து வந்தார். ஆனால் சுரேஷ் சரிவர அங்கு வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சுரேசுக்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். 2 குழந்தைகளை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார்.
இதனால் மனம் உடைந்த அலமேலு தனது கணவரால் படும் கஷ்டத்தை கள்ளக்காதலன் சுந்தரத்திடம் சொல்லி அழுதார். பின்னர் கணவரை தீர்த்துக்கட்ட சம்மதித்தார். இதையடுத்து சுந்தரம், சுரேஷை தனது காரில் அழைத்து கொண்டு சேலம் வந்தார். சேலத்தில் நண்பர்களான கார்த்திகேயன், லோகேஸ்குமாரை அழைத்து கொண்டு ஊ.மாரமங்கலம் ஏரி பகுதிக்கு சென்றனர். அங்கு 4 பேரும் மது குடித்தனர். பின்னர் 3 பேரும் சேர்த்து போதையில் இருந்த சுரேஷை கல்லால் தாக்கி கொன்றனர். பின்னர் அவரது உடலை தூக்கி கொண்டு அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் போடலாம் என்று நினைத்து தூக்கினார்கள். ஆனால் 3 பேரும் கடும் போதையில் இருந்ததால் சுரேஷ் உடலை தூக்கி செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அங்கேயே சுரேஷ் உடலை போட்டு விட்டு காரில் தப்பி விட்டனர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கி கொண்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கைதான 3 பேரும் நேற்று மாலை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு உடைய கள்ளக்காதலன் சுந்தரத்தின் உடல்நிலை தேறி வருகிறதா? என போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.