தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: முகநூல் காதலியுடன் வெளியே சென்றபோது விபத்து - வாலிபர் சாவு


தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: முகநூல் காதலியுடன் வெளியே சென்றபோது விபத்து - வாலிபர் சாவு
x
தினத்தந்தி 10 July 2018 9:15 PM GMT (Updated: 10 July 2018 7:10 PM GMT)

தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் முகநூல் காதலியுடன் வெளியே சென்ற வாலிபர் பலியானார்.

சிவமொக்கா,

சிவமொக்காவில், முகநூல் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றபோது, தனியார் பஸ் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய காதலி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா இடூரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்ன ஷெட்டி(வயது 26). இவர் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், தட்சிண கன்னடா மாவட்டம் சித்தாப்பூர் பகுதியை சேர்ந்த அர்பிதா ஷெட்டி(23) என்ற இளம் பெண்ணுக்கும் முகநூல்(பேஸ்-புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அர்பிதா ஷெட்டி உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மேலும் அவர்கள் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டும் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்தநிலையில் பிரசன்ன ஷெட்டியின் அண்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிரசன்ன ஷெட்டி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தனது அண்ணனை சந்தித்து நலம் விசாரித்தார். அதையடுத்து அவர் தனது காதலியை பார்க்க முடிவு செய்தார். அதன்படி அவர் நேற்று முன்தினம் தனது காதலி அர்பிதா ஷெட்டியை சந்தித்தார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சிவமொக்கா மாவட்டத்திற்கு புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை பிரசன்னஷெட்டி ஓட்டினார். அர்பிதா ஷெட்டி பின்னால் அமர்திருந்தார். அவர்கள் மாஸ்திகட்டே அருகே சென்றபோது எதிரே வந்த ஒரு தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரசன்ன ஷெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் அர்பிதா ஷெட்டி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நகரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரசன்ன ஷெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story