மாவட்ட செய்திகள்

வியாபாரியை காரில் கடத்திச்சென்று 80 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் வலைவீச்சு + "||" + 80 pounds of jewelry robbed by the car in the car

வியாபாரியை காரில் கடத்திச்சென்று 80 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் வலைவீச்சு

வியாபாரியை காரில் கடத்திச்சென்று 80 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் வலைவீச்சு
அரிமளம் அருகே வியாபாரியை காரில் கடத்திச்சென்று, 80 பவுன் நகைகளை கொள்ளையடித்த 4 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரிமளம்,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40). இவர் அப்பகுதியில் சொந்தமாக நகைக்கடை மற்றும் பழைய நகைகளை பழுது நீக்கம் செய்யும் பட்டறையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வியாபாரத்திற்கு வந்தார். பின்னர் அவர் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இருந்து 80 பவுன் பழைய நகைகளை வாங்கினார்.


பின்னர் நேற்று முன்தினம் இரவு காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார். அரிமளம் அருகே கீழாநிலைக்கோட்டை பாம்பாற்று பாலம் அருகே செல்லும்போது, திடீரென மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், விக்னேஷின் காரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

அதற்குள் அந்த கும்பலில் 3 பேர் மட்டும் காரில் இருந்து இறங்கி, விக்னேஷ் காரை சுற்றி வளைத்தார்கள். கார் கண்ணாடிகளையும் இரும்பு ராடுகள் மூலம் உடைத்தனர். பின்னர் விக்னேஷ் வைத்திருந்த நகை-பணத்தை பறிக்க முயன்றனர். இதனால் அவர் கூச்சலிடவே, 3 பேரும் சேர்ந்து விக்னேஷின் கண்ணை துணியால் கட்டினர். பின்னர் அவரது கை-கால்களை கட்டி காருக்குள் போட்டு விட்டு, பின்னர் விக்னேஷ் வைத்திருந்த 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து கொள்ளை கும்பலில் ஒருவர் விக்னேஷ் வந்த காரை ஓட்டினார். மற்ற 2 பேரும் விக்னேசுடன் அதே காரில் வந்தனர். கொள்ளையர்களில் ஒருவன் அவர்கள் வந்த காரை ஓட்டிக்கொண்டு பின்தொடர்ந்து வந்தார். கே.புதுப்பட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள கீரணிப்பட்டி கிராம ஆர்ச் முன்பு விக்னேசை அவர்கள் காரில் இருந்து தள்ளிவிட்டனர்.

பின்னர் அந்த காரை அங்கேயே விட்டு விட்டு, அவர்கள் வந்த காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து விக்னேஷ் கே.புதுப்பட்டி மற்றும் காரைக்குடியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

ஆனால் போலீசார் சோதனையில் சந்தேகப்படும்படியாக யாரும் சிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து, போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, காரில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஈடுபட்ட 4 மர்மநபர்களை பிடிக்க பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், மனோகரன், கவுரி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? அல்லது நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தகவல் தெரிவித்து, இந்த கொள்ளை சம்பவம் நடந்ததா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.