விருதுநகர்–சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க தாமதம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாராமுகம்


விருதுநகர்–சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க தாமதம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாராமுகம்
x
தினத்தந்தி 11 July 2018 3:15 AM IST (Updated: 11 July 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்–சாத்தூர் இடையே இரண்டு இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க மத்திய மந்திரி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர்–சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்ட கலெக்டர் அலுவலக வளாகம், படந்தால் விலக்கு ஆகிய பகுதிகளில் நடை மேம்பாலங்கள் அமைக்க கடந்த 2014–ம் ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நடை மேம்பால பணிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுவதற்கு முன்பு பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதால் நடை மேம்பால பணி தொடங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த நடை மேம்பாலங்கள் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், பல்வேறு அமைப்புகளும் நடைமேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்திற்கு வந்த மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணனிடம் இந்த நடை மேம்பால பிரச்சினை குறித்து வலியுறுத்தி கூறப்பட்ட போது, அவர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்னரும் தேசிய நெடுஞ்சாலை துறை நடை மேம்பாலம் அமைக்க வேண்டிய பகுதிகளில் மண் பரிசோதனை மேற்கொண்டதோடு, வேறு எந்த நடவடிக்கையும் தொடங்காமல் விட்டுவிட்டது. மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்த திட்டப்பணியினை மத்திய மந்திரி உத்தரவிட்ட பின்னரும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாராமுகமாக உள்ளது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே அதிகாரிகள் விருதுநகர்–சாத்தூர் இடையே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 நடைமேம்பாலங்களையும் நடப்பு நிதியாண்டிற்குள்ளாவது கட்டி முடிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story