மாவட்ட செய்திகள்

புதுமடம் அருகே தோப்புவலசை கடற்கரையில் 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் + "||" + Seaports seized offshore cards on the beach

புதுமடம் அருகே தோப்புவலசை கடற்கரையில் 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

புதுமடம் அருகே தோப்புவலசை கடற்கரையில் 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
புதுமடம் அருகே தோப்புவலசை கடற்கரையில் 250 கிலோ கடல் அட்டைகளை கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர்.

பனைக்குளம்,

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் டால்பின், கடல்குதிரை, கடல் அட்டை, ஆமைகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 600 வகையான அரிய கடல்வாழ் உயரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல கடல் அட்டை உள்ளிட்ட பல அரிய கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக கடல் அட்டைகளை தொடர்ந்து ஒரு சிலர் பிடித்து இலங்கைக்கு கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மீன் பிடி படகில் இருந்த 500 கிலோ கடல் அட்டைகளை கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் உச்சிப்புளி அருகே தோப்புவலசை கடற்கரை பகுதியில் நேற்று புதுமடம் கடலோர காவல் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் போஸ் தலைமையில் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் ஏராளமான சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து 61 சாக்கு பைகளில் இருந்த சுமார் 250 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த கடலோர போலீசார் வாகனம் ஒன்றில் ஏற்றி மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தோப்பு வலசை கடற்கரையில் கிடந்த 250 கிலோ கடல் அட்டைகளும் பதப்படுத்தப்பட்டவையாக இருந்தன.

இவற்றை படகு மூலமாக இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வந்திருக்கலாம் என்றும், கடலோர போலீசார் வருவதை கண்டதும் அதை பிடித்து வந்த நபர்கள் தப்பி ஓடியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடல் அட்டைகளை கடற்கரையில் விட்டுவிட்டு தப்பி ஓடிய நபர்களை கடலோர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.