ஆத்தங்குடி நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும், காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்
திருப்பத்தூர் தாலுகா ஆத்தங்குடியில் உள்ள நடுநிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், காரைக்குடியில் நடைபெற்றது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைவர் அருளானந்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தங்குடி ஊராட்சியை சுற்றிலும் 50–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுநிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 5 ஆண்டிற்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
காரைக்குடி நகரில் செஞ்சை, சந்தைப்பேட்டை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருட்கள் மற்றும் மது விற்கப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்து தெருமுனை பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தாலுகா அலுவலகம் அருகில் சான்றிதழ் பெற மனு எழுதுவோர் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உதவியாக இருக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.