வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டம், சென்னை, புறநகர் பகுதிகளில் மின்தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.
மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு 2 நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல்நிலை 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட்டும், 2–ம் நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் நிலை 2–ம் அலகில் பராமரிப்பு காரணமாக 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2–ம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2 நிலைகளில் 1,020 மெகாவாட் மின்உற்பத்தி மட்டும் நடக்கிறது.
இதனால் திருவள்ளூர் மாவட்டம், சென்னை, புறநகர் பகுதிகளில் மின்தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.