அண்ணாநகரில் கள்ள நோட்டுகளை கொடுத்து நிதி நிறுவன அதிபரை ஏமாற்றியவர் கைது
அண்ணாநகரில் கள்ள நோட்டுகளை கொடுத்து நிதி நிறுவன அதிபரை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அம்பத்தூர்,
சென்னை முகப்பேர் மேற்கு ஜீவன் பீமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 44). இவர் அண்ணாநகர் சாந்தி காலனியில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் வாங்க வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் திருநின்றவூரை சேர்ந்த ராஜேஷ் (43) என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பெற்று சென்றார். பின்னர் கடந்த 7–ந் தேதி இரவு ராஜேஷ் தன்னுடைய காரை மீட்க பாலசுப்பிரமணியனின் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் பாலசுப்பிரமணியனிடம் கடனாக பெற்ற ரூ.2 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.10 ஆயிரம் என ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை கொடுத்தார்.
மொத்த தொகைக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக செலுத்தி, ராஜேஷ் காரை மீட்டு சென்றார். அதன் பின்னர் ராஜேஷ் கொடுத்து சென்ற 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
அப்போது அதில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம் உடனே ராஜேசுக்கு போன் செய்தார். ஆனால் ராஜேசின் போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலசுப்பிரமணியம் இது குறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை 98 நோட்டுகளாக கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இந்த மோசடி சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கள்ள நோட்டு வழக்கு என்பதால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.