தொடர் நகை பறிப்பு: கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து


தொடர் நகை பறிப்பு: கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 11 July 2018 3:30 AM IST (Updated: 11 July 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பகுதியில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட தேள்கரடு வீதியில் கடந்த மாதம் முன்னாள் கவுன்சிலர் தனபாக்கியம் என்பவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். இதேபோல் மூலக்கிணறு கிராமத்தில் வீட்டின் உள்ளே புகுந்து கருணாம்பிகை என்பவர் அணிந்து இருந்த நகையையும், ரங்கசமுத்திரம் விரிவாக்கம் வீதியை சேர்ந்த தமயந்தி என்பவர் நடை பயிற்சி சென்றபோது, அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

கடந்த 5-ந் தேதி தேன்கரடு வீதியில் வள்ளியம்மாள் என்பவர் அவருடைய வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், முகவரி கேட்பது போல் அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.

சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. எனவே நகை பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்களை கண்டுபிடித்து கைது செய்ய ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சத்தியமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு செல்லும் போலீசார் சீருடையில் செல்லாமல் லுங்கி, சட்டை அணிந்து சாதாரணமானவர்கள் போல் மாறுவேடத்தில் இருக்கின்றனர்.

மேலும் சத்தியமங்கலம் பகுதியில் அறிமுகம் இல்லாத நபர்கள், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரியும் நபர்கள் குறித்து உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கி உள்ளனர். 

Next Story