மாவட்ட செய்திகள்

கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு + "||" + The heavy rains are kabini, KRS. Water flow to dams

கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36,875 கனஅடி வீதம் கபிலா ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு பகுதியில் உள்ள கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மண்டியா,

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கர்நாடகத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.


கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார், மலைநாடுகளான குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இடையில் கடந்த 2 வாரம் மழை எதுவும் இல்லாமல் இருந்தது. அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

தொடர் கனமழை காரணமாக 2 அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதே மழை தொடர்ந்து நீடித்தால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 உயரம் கொண்ட இந்த அணை ஏறக்குறைய தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது. ஆனாலும், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2 அடி குறைவாகவே தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி கபினி அணையில் 2,282.14 அடி தண்ணீர் உள்ளது.

வயநாடு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு வினாடிக்கு 35,685 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால், அணையின் பாதுகாப்பை கருதி, அணையில் இருந்து வினாடிக்கு 36,875 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் கபிலா ஆறு மூலம் காவிரி ஆற்றில் கலந்து தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து செல்கிறது. அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கபிலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபிலா ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோல மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்துள்ள மற்றொரு முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகரின் (கே.ஆர்.எஸ்.) நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் தலைக்காவிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 112.70 அடி தண்ணீர் உள்ளது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 110.40 அடி தண்ணீர் இருந்தது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.30 அடி உயர்ந்து உள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 31,490 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணை நிரம்ப 12.10 அடி பாக்கி இருப்பதால், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3,571 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வந்தால், அணை இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணை நிரம்பினால், இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து இதேபோன்று தண்ணீர் வந்து கொண்டிருந்தால் கடந்த 2013-ம் ஆண்டு பிறகு இந்த ஆண்டு கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி அணைக்கு வினாடிக்கு 19,847 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 2,350 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதுபோல் ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,857.04 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 2,859 அடியாகும். அணைக்கு 12,670 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 13,470 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்தும் வினாடிக்கு 40,446 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ள இந்த தண்ணீர் தமிழகத்துக்கு செல்கிறது. கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.