மாணவர்கள் அறிவியல், கணித திறன் வளர்ப்பதற்கான நடமாடும் ஆய்வக வாகனம்


மாணவர்கள் அறிவியல், கணித திறன் வளர்ப்பதற்கான நடமாடும் ஆய்வக வாகனம்
x
தினத்தந்தி 10 July 2018 10:45 PM GMT (Updated: 10 July 2018 9:16 PM GMT)

மாணவர்கள் அறிவியல், கணித திறனை வளர்ப்பதற்கான நடமாடும் ஆய்வக வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வக வாகனம் அரசு பள்ளிகளுக்கு செல்ல இருக்கிறது.

திருச்சி,

திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் மூலம் அறிவியல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தையும், நடமாடும் ஆய்வக வாகனத்தையும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார்.

ஒரு வேனில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் ஆய்வகத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல், சூழலியல், கணிதம் தொடர்பான சுமார் 150 வகையான உபகரணங்கள், கருவிகள் இடம் பெற்று உள்ளன. இந்த ஆய்வகம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் செல்ல இருக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்படும் முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான பாடங்களை மனப்பாடமாக படிப்பதை விட அது தொடர்பான உபகரணங்களை நேரடியாக பார்த்து அதன் ஆற்றல்களை தெரிந்து கொண்டால் மாணவர்களின் மனதில் அவை அப்படியே பதிந்து விடும். இதன் மூலம் அவர்களது திறன் மேம்பாடு அடையும். இந்த திறன் மேம்பாடு எதிர்காலத்தில் அவர்கள் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கும்.

இந்த நடமாடும் ஆய்வக வாகனத்தில் உள்ள மாதிரி கருவிகள் மூலம் அறிவியலில் செய்முறை பாடங்களுக்கான வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்கள் பயன் அடைய முடியும். அறிவியல் சாதனங்களின் பயன்பாடுகளை பற்றி விளக்குவதற்கு பயிற்சி பெற்ற பயிற்றுனர்களும் உடன் செல்ல இருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூறுவதற்கான பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு அளிக்க இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் மாணவ -மாணவிகள் பயன் அடைவார்கள் என தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story