போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பிக்க முயன்ற விசாரணை கைதிகள் - கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு


போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பிக்க முயன்ற விசாரணை கைதிகள் - கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2018 9:39 PM GMT (Updated: 10 July 2018 9:39 PM GMT)

போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற விசாரணை கைதிகளால் மும்பை கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அலி அப்பாஸ் ஜாபர் கான்(வயது29), ராஜேஸ் ராஜ்(25) ஆகிய 2 பேரை ஆயுத வழக்கில் கைது செய்து இருந்தனர். 2 பேரும் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கைதிகள் 2 பேரும் விசாரணைக்காக எஸ்பிளனேடு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சென்ற பிறகு விசாரணைக்காக கோர்ட்டு அறையின் முன் கைதிகள் 2 பேருடன் போலீசார் காத்து இருந்தனர்.

அப்போது கைதிகள் 2 பேரும் கழிவறை செல்ல வேண்டும் என கூறினர். எனவே போலீசார் அவர்களை கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்றனர்.

கழிவறை செல்வதற்காக போலீசார் கைதிகளின் விலங்கை அவிழ்த்துவிட்டனர். இந்தநிலையில் கழிவறை சென்று வந்த கைதிகள் திடீரென தாங்கள் கையில் எடுத்து வைத்திருந்த மண்ணை போலீசாரின் கண்களில் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் வெவ்வேறு திசைகளில் அங்கு இருந்து தப்பிஓடினர். எனினும் சுதாரித்து கொண்ட போலீசார் 2 பேரையும் துரத்தி பிடித்தனர்.

இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பி ஓடிய கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story